வெள்ளி, 9 ஜனவரி, 2009

அப்பாகடிதம்

மீனாட்சிபுரம் நெல்லை சந்திப்பின் ஒரு பகுதி. மீனாட்சிபுரத்தின் தலைவாசலில் சித்திவிநாயகர் கோவில், அதற்கு எதிராக கீழத்தெரு எனும் கிழக்கு தெரு. கீழத்தெருவின் இறக்கத்திலேயே ஜிவனுள்ள தாமிரபரணி ஆறு அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும். கீழத்தெருவில் வாடகைவீட்டில் ரொம்ப ஆண்டுகளாக குடியிருக்கும் மணியின் அப்பா சுப்பையா ஆச்சாரி வேலைக்கு செல்ல தயாரகி கொண்டிருந்தார். வேலைக்கு நேற்று வந்த சின்னபையன் இன்னும் வராததால் அவனை எதிர்பார்த்து கொண்டிருந்தார். நேரமாக நேரமாக அவருக்கு மனதுக்குள் கோபம் லேசாக தலை தூக்க ஆரம்பித்தது. ஆனாலும் தச்சு வேலையில் கஷ்டமான இளைப்பு வேலைக்கு வரும் சின்ன பையன்கள் திரும்ப வேலைக்கு வருவது அரிது எனும் எதார்த்தம் மனதில் உரைக்க சாந்தமானார்.

அவரின் ஒரே மகன், மணிகண்டன் எனும் மணி, ம்திதா இந்து உயர்நிலைபள்ளியில் பள்ளி இறுதி ஆண்டு படிப்பு முடித்துவிட்டு தூய யோவன் கல்லூரியில் சேர்ந்து கல்லூரி திறப்பதற்காக காத்து இருந்தான்

மணி ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தும் நுழையாமல்
“யம்மா, அப்பா இன்னும் வேலைக்கு போகல”.
“இளைக்கிற பையன் இன்னும் வரலனு காத்திட்டு இருக்கார்” எனறாள் மணியின் அம்மா
“சரி சரி சோறு போடு வயிறு பசிக்கு “ என லுங்கியை கட்டியவாறு சாப்பிட உட்கார்ந்தான் மணி
மணியின் அம்மா பழைய சாதம் வைத்து சுண்ட வைத்த நேற்றைய குழம்பையும் எவர்சில்வர் தட்டில் வைத்தாள்.
மணி சாப்பிட ஆரம்பித்தான்.

வாசலிலுக்கும் வீட்டுக்கும் போவதும் வருவதுமாய் இருந்தார்.
சுப்பையா ஆச்சாரி. நேற்று இளைப்பு வேலைக்கு வந்த பையனுடைய அம்மா சுப்பையா ஆச்சாரி வீட்டுக்கு வந்தாள்
“பையனுக்கு உடம்பு சரியில்ல நாளைக்கு வாரானாம் “
என அவளுடைய பையனை விட்டு கொடுக்காம ஒரு பொய் சாக்கு சொன்னாள்.
“நீதானே வேலைக்கு கூட்டிகிட்டு போய், வேலை கத்து கொடுங்கனு சொன்ன, இப்ப இப்படி சொல்லுத, காலையிலேயே சொல்லிருக்கு கூடாதா நான் வேறு பையனை பார்த்திருப்பேனெ”

“கோபபடாதீங்கண்ணே, விளையாட்டு பையன்தானே. நாளைக்கு கட்டாயம் அனுப்பி வைக்கேன்” என சமாதான படுத்தியவாறு திரும்பி சென்றாள்.

சுப்பையா ஆச்சாரிக்கு என்ன செய்வது இன்னைக்கு வேலைக்கு போவதா, இப்பவே நேரமாயிட்டு, இளைப்பு வேல முடிஞ்சாத்தான் மற்ற வேலையை ஆரம்பிக்க முடியும் எண்ணத்துடன் வீட்டுக்குள் நுழைந்தார்

“தம்பி, கொதி குழம்பு ஊற்றவா,”
“வேண்டாம் வேண்டாம “
“ உனக்கு ரொம்ப பிடிக்கம்னு கேட்டேன்”
“அதுக்கினு தினமும்மா”
மணி சாப்பிட்டு முடித்து, .கை கழுவச் சென்றான். அவனுடைய அப்பா, அம்மாவிடம் ஏதோ கேட்பதும் அம்மா அதற்கு அவரிடம் ஏதோ சொல்லுவது மணிக்கு கேட்டது. குற்றாலத்தில் இருப்பவன் அருவியில் தினமும் குளிக்க மாட்டான். என்பது போல நெல்லை சந்திப்பின் ஒரே சொர்க்கமான பெண்கள் உயர்நிலைப்பள்ளி மீனாட்சிபுரத்தில் இருந்தும், எப்பவாதுதான் பாபு சலூன் பக்கம் நின்னுகிட்டு தினத்தந்தி வாசித்தவாறு பள்ளி செல்லும் தேவதைகளை பார்க்க தோன்றும். இன்னைக்கு என்னவோ பாபு கடைக்கு செல்லலாம் என மணி.அவசர அவசரமாய் புறப்பட்டான்
மணியின் அம்மா தயங்கி தயங்கி “அப்பாக்கு வேலைக்கு ஆள் கிடைக்கல, நீ இன்னைக்கு போறய தம்பி”
“போம்மா எனக்கு வேற வேல இருக்கு” என சமாளித்து பார்த்தான்
“பாவம்டா அப்பா, இப்ப போய் யார வேலைக்கு கூப்பிட முடியும் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் போ”
அவன் சொல்லும் பதிலை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார் மணியின் அப்பா
“சரி சரி “ என்றான் மகா எரிச்சலுடன் மணி

வடித்த சாதத்தை கார குழம்பிட்டு விரவி, வெண்கல தூக்குசட்டியில் வைத்து சாதத்தை சம படுத்தி குழம்பிலிருந்து காய்களை கரண்டியில் எடுத்து அதன் மீது வைத்து ஒரு மஞ்ச துணிபையில் வைத்து மணியிடம் கொடுத்து கொண்டே ‘இரண்டு பேருக்கும், சாப்பாடு வைத்திருக்கேன்’.

மணிக்கு, நாவல்டி ஸ்டோரில் வேலை பார்க்கும் ராஜா மூலம் ‘சோஸலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா’ கட்சியினருடன் பழக்கமாய் இருந்ததால், எந்த வேலையும் குறைந்த வேலை இல்லை எனும் மனநிலை ஏற்கெனவே வளர்த்து கொண்டவன் ஆதலால், அவன் அப்பா முன் செல்ல பின்னால் தொடர்நது சென்று கொண்டிருந்தான். அவன் அப்பா வாட்டர் டேங் வந்ததும் கண்ணம்மன் கோயிலுக்கு செல்லும் பஞ்சகிராம ரோட்டில் செல்ல எத்தனிக்க, மணியின் நண்பர்கள் வீடுகள் அந்த பக்கம்தான் இருக்கு, எதிர்பார விதமா எதிரில் வந்தாள். என்ன செய்வது என யோசித்து மணி,
“யப்பா, இப்படியே செல்லுவோம் என அங்கு விலாஸ் ரோட்டில் நடந்தான் .அவன் அப்பாவும் ஏதுக்கு சொன்னான் என தெரியாமல், வேலைக்கு அவன் வருவதே பெரிய காரியம் என பின் தொடர்ந்தார். சந்திப்பு பேரூந்து நிலையம் சென்று தேவர்குளம் செல்லும டவுண் பேரூந்தில் ஏறி அமர்ந்தார்கள் மணிக்கு பேரூந்து நிலையம் வரும் வரை அவனது நண்பர்கள் யாரும் எதிரில் வராதது செளகரியமாக இருந்தது. வந்திருந்தால் பெரிய விளக்கம் கொடுக்க வேண்டியிருந்திருக்கும் என நிம்மதியடைந்தான்.

அப்பாவிடம் ஒன்றும் பேசாமல் அவர் அருகில் அமர்ந்து வழியில் தென்படும் காட்சிகளையும் மக்களையும் சிரத்தையில்லாமல் பார்த்து கொண்டு வந்தான். அப்பா, வீட்டு வேலை எடுத்திருந்த
குப்பனாவரம் செல்ல மானூர் இறங்க வேண்டும என்பதால் மாவடி வந்தவுடன் உஷாராகினான். மானூர் வந்தவுடன் .அவன் அப்பா முன் இறங்க மணி அவருக்கு பின்னால் இறங்கினான்.
“டீ வேனும்மா “ என மணியை கேட்டார்
“வேண்டாம்”
மணியின் அப்பா மானூரில் உள்ள சின்ன பஜாரை கடந்து ஒரு சந்து வழியாக குப்பனவரம் செல்லும முக்கிய பாதையில் நுழைந்தார். மணியும் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான். வழியில் தும்பை செடியில் வட்டு போல வட்டமாக வெள்ளை தாள் ஒன்று சிக்கி கொண்டிருந்ததை மணி எடுத்து பார்த்தான்.
அது வட்டமாக கிழிக்கப்பட்டு அதன் விளிம்புகள் சின்னசின்னதாக வெட்டப்பட்டு ஒரு முனை ஒரு பக்கம் மடித்தும்,மறு பக்கம் எதிர் திசையில் மடித்தும் டயர் போல் இருந்தது.ஆரியங்காவு வழியாக அடிக்கும் காற்று மானூர் பக்கம் அதிகமாக இருக்கும் என்பதால்,வேகமாக அடித்த காற்றில் அவன் கையிலிருந்து நழுவிய வட்டுத்தாள் காரிலிருந்து கழண்டு ஓடும் டயர் போல் அழகாக வேகமாக குப்பனவரம சாலையில் ஓடி, சாலையை தாண்டி கருவேல செடிக்குள் சென்று மாட்டி கொண்டது. அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இங்கு எப்படி இவ்வளவு அறிவுடன் இதை செய்தது என எண்ணியவாறு அவன் அப்பாவை பின் தொடர்ந்தான். அவன் அப்பா இப்போது சாலையிலிருந்து விலகி, வயற்காட்டு வழியாக நடக்க ஆரம்பித்தார். வழியில் தோட்டங்களை கடந்து சென்றனர். அவற்றில் அகத்தி செடி உயரமாய் வளர்ந்து, காற்றில் உடைந்து விடுமோ என பேய் ஆட்டம் ஆடி கொண்டிருந்தது. வேலியின் ஊடே ஊடு பயிரான மிளகாய் செடிகளும், அதன் மிளகாய் பழம் மூலம் தங்களது இருப்பை வெளிகாட்டி கொண்டிருந்தது. வயலை தாண்டி,
ஒரு தெருவில் அப்பா நுழைய, மணியும் பின் தொடர்ந்தான்
அந்த தெருவில் ஓரு குடிசையும் அதன் பக்கத்தில புதிதாக கட்டப்படும் வீடும் தென்பட்டது. அந்த வீடாகத்தான் இருக்கும் என மணி மனதில் நினைத்து கொண்டான். அதை போல் முன்னால் சென்ற அவன் அப்பா அந்த குடிசை வீட்டு இடுவல் வழியாய் ஆட்டு தொழுவத்திற்குள் சென்றார். அங்கு அறுத்த மரங்கள் சைஸ் வாரியா அப்பா அடுக்கி வைத்திருந்தது மணியில் கண்ணில் பட்டது.
யாரோ “என்ன நய்னா, சின்ன நய்னாவை வேலைக்கு கூட்டிட்டு வந்திட்டிங்க போல. படிச்சவங்கள ஏன் தொந்தரவு பண்ணுதீக “
என கேட்பது கேட்டது.
“பையன், யாரும் கிடைக்கல. என்ன செய்வது அழைச்சிட்டு வந்திட்டேன்”
‘யார் அப்பா”என்று வினவினான் மணி
“தாவூது தெரியாது, உங்க மாமா அடிக்கடி சொல்லுவாரே.
அவன் தான்.அவன் வீட்டு வேலைதான் இது”
மாமா எப்ப சொன்னார் யாரை சொன்னார் என மணியின நினைவில் வரவில்லை. தூக்கு சட்டி எங்கு வைப்பது என அவன் தவிப்பது பார்த்து
“கொண்டா“ என வாங்கி பத்திரமாக ஏத்தன சாமான் வைத்திருந்த இடத்தில் ஏத்தன சாமானை எடுத்து விட்டு சாப்பாட்டு தூக்கை வைத்தார். மணியின் மூக்கு ஏதோ நாற்றம் அடிப்பதை உணர்ந்தது
“என்னமோ நாற்றம் அடிக்கு” என. அவனே சொல்லி கொண்டது. அவன் அப்பாவின் காதில் விழ
“செம்மறி ஆட்டின் கிடை பக்கத்தில் போட்டு இருந்ததால் இந்த நாற்றம்” என மணியின் அப்பா சொன்னார்.
மணி பக்கத்தில் உள்ள அறுத்து வைத்த பலகையின் மீது அமர்ந்தான். மணியின் அப்பா சட்டையை கழற்றி வைத்துவிட்டு சாணை தீட்டுவதற்கான பலகையை எடுத்து, மரம் இளைக்க போட்டுள்ள பலகை மேடைமீது வைத்து அதன் மீது பொடியாக நொறுக்கப்பட்ட சரளை கல்பொடியை பரத்தி உளிகளை தீட்ட ஆரம்பித்தார்.

மணி அப்பாவின் எடுப்பான மூக்கை பார்த்தான். அப்பா, அவரது சின்ன வயசில் மணிமுத்தாறு அனைக்கட்டு வேலைக்கு சென்ற பொழுது கீழே விழுந்து முன்பல் உடைந்து போனதும், சின்ன வயசில் அம்மை நோய் வந்து காது சரியா கேட்காமல் போனதும் பற்றி அம்மா சொன்னது நினைவுக்கு வந்ததது. அப்பா சராசரியான உடல்வாகு உள்ளவர்.உள்ளங்கை ரேகை எல்லாம் அழிந்து சொரசொரனு இருப்பதை அவன் குழந்தையாக இருக்கும் பொழுது தடவி பார்த்திருக்கிறான்.அப்பாவின் கைகள் பலமானதாக உளிகளை தீட்டி கொண்டு இருந்தது. அப்பா ஒரேஒரு தடவை அவனது சின்ன வயசில் “கானா சானா” சரியாக சொல்லவில்லை என்று அவனை அடித்து அம்மாவிடம் திட்டு வாங்கிய பின், அவனை எதற்காகவும் அடித்தது இல்லை. என்பது அவன் நினைவுக்கு வந்ததது.

மணியின் அப்பா உளிகளை தீட்டி முடித்து விட்டு, மடியிலிருந்து மூக்கு பொடி டப்பாவை ஒரு தட்டு தட்டி
மூடியை திறந்து ஒரு சிட்டிகை பட்டணம் பொடி எடுத்து மூக்கில் தினித்து, ஒரு உறிஞ்சு உறிந்தார். அப்புறம் மர இளப்புளியில் அதன் சில்லை வைத்து சரி செய்தார். பின்னா சைஸ்வாரியாக அடிக்கி வைக்கப்பட்ட சன்னலுக்கான பலகையை இளைப்பதற்கான மேடையில் வைத்து மணியை அழைத்தார்.
மணி இளப்புளியின் இரண்டு கைப்பிடிகளையும் இரண்டு கைகளால் பிடித்து இழுத்தான். அது கொங்குமர பலகை என்பதால் இளப்புளியை அவனது பழக்கமில்லாத கைகளால் இழுப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது.வேறு என்ன செய்வது என்று கஷ்டப்பட்டு இளைப்பு வேலையை தொடர்ந்தான்.இளைத்த பலகைகளின் மீது அடையாளத்திற்காக பென்சிலால் வளைவாக ஒரு கோடு போட்டு இளைத்த பலகையை ஒரு ஓரமா மணியின் அப்பா வைத்தார்.


சூரியன் நடுவானத்துக்கு வந்து கீழே இறங்க தொடங்கியது. மணிக்கு வயிற்றில் லேசாக பசி எடுக்க ஆரம்பித்தது. இருந்தாலும் எப்படி சொல்வது என்று இளப்புளியை இழுத்து கொண்டிருந்தான். இந்த பலகையுடன் சாப்பிடலாமென அப்பா சொல்லுவார் என்று நினைத்தால். அவர் அடுத்த பலகையும் எடுத்து இளைப்பதற்கு எடுத்து வைத்தார். சரியென அந்த பலகையை இளைத்து முடித்தவுடன்
“அப்பா சாப்பிடலாம” என்றான்.
“சரி கை கழுவி சாப்பிடு” என்றார்
மணியின் அப்பா. மணி கையை கழுவி விட்டு தூக்கு சட்டியை திறந்து காய்களை தூக்கு சட்டி மூடியில் வைத்துவிட்டு, குழம்புவிரவிய சாதத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்.அதற்குள் அவனுடைய அப்பா குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்திருந்தார். என்றைக்குமில்லாமல் அன்றைக்கு அகோர பசியால் மணி பாதிதூக்கு சட்டிக்கு மேல் சாப்பிட்டு விட்டான் . தீடிரென அவனது அப்பாவுக்கு சாதம் மிச்சம் வைக்க வேண்டுமென்பது நினைவு வந்தவனாக சாப்பாட்டிலிருந்து எழுந்தான் .அவன் பசியை அறிந்த, அவன் அப்பா
“ இன்னும் கொஞ்சம் சாப்பிடுடா” என்றார்.
“வேண்டாம் அப்பா போதும்” என்று கையை கழுவினான். வயிறு நிறையாத மாதிரியே இருந்தது. நாளைக்கு அம்மாவிடம் கூட கொஞ்ம் சாதம் வைக்க சொல்ல வேண்டுமென மனதிற்குள் சொல்லிகொண்டான. மணியின் அப்பா சாப்பிட ஆரம்பித்திருந்தார். அப்பாவிற்கு கட்டாயம் சாப்பாடு பத்தாது . சே, கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாமல் அதிகமாக சாப்பிட்டு விட்டோமே என எண்ணி வெட்கப்பட்டான். மணியின அப்பா சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு ஒரு பலகையின் மீது அமர்ந்தார். கொஞ்நேரம் கழித்து மணியின் அப்பா திரும்பவும், இளைக்க மணியை அழைத்தார். மணியின் கைகள் நொந்து நோக ஆரம்பித்துவிட்டது. சரி வேலையை முடித்தால் தான், அப்பாவுக்கு அடுத்த கட்ட வேலையை ஆரம்பிக்க முடியும் என்று தொடர்ந்து இளப்பு வேலையை தொடர்ந்தான். இழுப்பது மணிக்கு ரொம்ப கஷ்டமாகி இழுப்பதில் தொய்வு ஏற்பட மணியின் அப்பா
“என்னடா கஷ்டமா இருக்கா”
“இல்லை”
“சரி சரி இந்த பலகையோடு முடித்து கொள்ளலாம் எனறார் மணியின் அப்பா.
“சரி அப்பா” என்றான் மணி.
மணியின் அப்பா இளைத்த சன்னல் சட்டங்களை எடுத்து. மார்க் செய்தார். மணியிடம்
“ அந்து குத்துஉளியை எடு “ என்றார்.
“இதா, அப்பா“ என ஒரு உளியை காண்பித்தான்”
“இது இல்ல. அதற்கு பக்கத்தில் உள்ளதை எடு”
மணியின் அப்பா சட்டங்களில் துளை அடிக்க ஆரம்பித்தார்.
எல்லா சட்டங்களையும் துளை அடித்துவுடன்,தமர் அடிக்க
தமர்இயந்திரத்தை எடுத்தார். அதில் கயிற்றை சுற்றி மணியை அழைத்தார். மணி கயிற்றை இழுத்தான். தமர் இழுப்பது கொஞ்சம் இளப்பதைவிட கஷ்டமான வேலை இல்லை.
தமர் போட்டு முடிந்ததும், பள்ளிகூட விட்டு பிள்ளைகள் தெருவில் செல்லும் சத்தம் கேட்டது. மணி இப்பொழுது நேரம் 4.30 க்கு மேல் இருக்கும் என நினைத்து கொண்டான்.. மணியின் அப்பா சன்னல் சட்டங்களை பூட்டி பூட்டி சரி பார்த்தார். சரி பார்க்க பட்ட சட்டங்களை சக்கை அடித்து ஒரு பக்கம் வைத்தார்
வெளிச்சம் குறைய ஆரம்பித்தது. அப்பா ஏத்தன சாமான்களை வரிசையாக அடுக்கி சாக்கில் கட்டி, அதனை கயிற்றால் கட்டி கொண்டே
“ மணி கைகாலை கழுவிட்டு புறப்படு” என்றார்.
மணி கைகால் முகத்தை கழுவி அவனது லுங்கியின் அடிபாகத்தை எடுத்து முகத்தை துடைத்தான். மணியின் அப்பாவும் கைகால் கழுவி முகத்தை துடைத்து கொண்டு
வீட்டு சொந்தகாரர் தாவீதுடம்
“ போயீட்டு வாரோம்”
என்று சொல்லி மணியும் மணியின் அப்பாவும் கிளம்பினார்கள் .
லேசாக இருட்ட தொடங்கியது.. மணிக்கு வழியில் பாம்பு கிம்பு கிடந்து மிதித்து கொத்தி விடக்கூடாது என பயத்துடன் அவனுடைய அப்பா முன் செல்ல மணி பின் தொடர்ந்தான். வந்த வழியாக மானூர் வந்தார்கள். மணிக்கு வயிறு பசி மீண்டும் லேச எட்டி பார்த்தது. அவனுடைய அப்பா
“டீ சாப்பிடுறாயா என்றார் “
“ சரி”
பாய்கடையில் நுழைந்து இருவரும் அமர்ந்தனர். பாய்கடையில் சுடசுட தோசையினை ஒன்று இரண்டு பேர்கள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். மணியின் அப்பா
“தோசை சாப்பிடுகிறாயா”
“சரி, அப்ப எனக்கு டீ வேண்டாம்” என்றான் மணி
பாயிடம் மணியின் அப்பா தோசை வைக்குமாறு சொன்னார்.
பாய், சின்ன துண்டு இலையை, மணியின் முன் போட்டு, பெரிய லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்து வைத்து சென்றார். மணி, லோட்டாவிலிருந்த தண்ணீரை, கொஞ்சம் எடுத்து இலையில் தெளித்து இலையை சுத்தம் செய்தான். அவனது அப்பாவிடம்
“நீ சாப்பிடலயா”
“எனக்கு வேண்டாம்”
பாய் சுடச்சுட இரண்டு தோசையை அவனது இலையில் போட்டு
கடலை மாவு சாம்பாரை சுடாக ஊற்றினார். சாம்பார் நல்ல கொழு கொழுனு இருந்தது. மணி சாம்பாரை தொட்டு சாப்பிட்டான். சூட்டிலும் வயிற்று பசியிலும் தோசை நன்றாக இருக்க இன்னும் இரண்டு தோசை சாப்பிடலாம் என எண்ணினான். ஆனால் சாப்பிட்டு கொண்டு இருக்கும் மற்றவர்களுக்கு வைத்து பின் தான் மணிக்கு வரிசைகிரமமாக வரும் என்பதை உணர்ந்து கையை கழுவ எழுந்தான். பாய் கொடுத்த டீ யை மணியின் அப்பா குடித்த படியே
“தோசை போதுமா, கூட இரண்டு தோசை சாப்பிடேன்டா”
“போதும்” என்று கையை கழுவினான்.
மணியின் அப்பா பாயிடம் சாப்பிட்டதற்கு பணத்தை கொடுத்து விட்டு
“ சரி கிளம்பலாம்” என்றார்.
இருவரும் பேரூந்து நிறுத்தம் வந்தனர். திருநெல்வேலி செல்லும் எல்லா நேர்வழி பேரூந்துகளும் கூட்டமாக வர இரண்டு மூன்று பேரூந்துகளை விட்டுவிட்டு கூட்டம் கொஞ்சம் குறைவான பேரூந்தில் ஏறி இருவரும் அமர்ந்தனர். நரியூத்து தாண்டியதும் மணிக்கும் மணிஅப்பாவுக்கும் உட்கார இருக்கை கிடைத்தது.
மணி சன்னல் ஒரமாய் அமர்ந்தான். மணியின் அப்பா

“குளிர்ந்த காற்று அடிக்கும்டா” என்று பொதுவாக சொல்லுவது போல் சொன்னார். நரியூத்து மேட்டில் இருந்து திருநெல்வேலியை பார்த்தால் திருநெல்வேலி வானத்தில் நட்சத்திரங்கில் சில இடத்தில் கொச கொசனு இருப்பது போல் மின்விளக்கு கூட்டமாய் தெரிந்தது. மணி சன்னல் வழியாய் குளிர்ந்த காற்று முகத்தில் பட ரசித்தவாறு பிரயாணம் செய்தான்.
திருநெல்வேலி டவுண் வந்ததும் குளிர்ந்த காற்று குறைந்து. வெப்பமும் இரைச்சலும் அதிகமானது. மணி பேரூந்துக்குள் இருக்கும் சக பயணிகளை பார்த்தான். நிறைய பேர் டவுணில் இறங்க தயாரகி கொண்டிருந்தார்கள். அவர்களை இறக்கி விட்டுவிட்டு , சந்திப்பை நோக்கி பேரூந்து விரைந்தது.
சந்திப்பில் இருவரும் இறங்கி நடந்தனர். வழியில் நொண்டி லாலாகடையை கடக்கையில்
“ மிச்சர் வேனுமா” என்றார் மணியின் அப்பா
பழைய சாதத்துக்கு மிச்சர் நன்றாக இருக்கும என்பதால், மணி
“வாங்கனும்ன வாங்கு” என்றான்
நொண்டி லாலா வீட்டில் அப்பா தச்சு வேலை ஏற்கெனவே செய்து இருப்பதால், மணியின் கடையில் நின்றவுடன்
“என்ன பையனையும் வேலைக்கு கூட்டிட்டு போய்ட்டு வாரீங்களா………….. என்ன வேனும் “ என்றார்.
“மிச்சர் இரண்டு பொட்டலம் கொடுங்க”
லாலா கடைபையனிடம்
“இரண்டு பொட்டலம் மிச்சர் கட்டி கொடு” என்றார். மிச்சா பொட்டலத்தை வாங்கி கொண்டு பணத்தை கொடுத்து விட்டு இருவரும் வீட்டுக்கு நடந்து சென்று வீட்டை அடைந்தனர். மணியின் அம்மா மணியின் அப்பாவிடம்
‘இளப்பு வேலை முடிந்ததா இல்ல அவனை நாளைக்கும் கூட்டிட்டு போறிங்களா”
“வேல முடியல நாளைக்கும் வந்தால் வேல முடிஞ்சிறும் “
என்று கூறியவாறு கைகால் கழுவி வீட்டுக்குள் நுழைந்தார்.
மணி கைகால் கழுவிவிட்டு அவனது நண்பாகளை பார்க்க கடைவீதிக்கு சென்று அவர்களிடம் பேசிவிட்டு 10 மணிவாக்கில் வீட்டுக்கு வந்தான். அதற்குள் மணியின் அப்பா தூங்கி இருந்தார். மணியின் அம்மா
” சாப்பாடு வைக்கட்டா, இவ்வள நேரம் என்ன பேச்சு” என்று கூறியவாறு பழைய சாதத்தை தட்டில் வைத்து நீத்தண்ணீர் ஊற்றி , சின்ன தட்டில் மிச்சரும் காலையில் வைத்த குழம்பை ஒரு கரண்டி ஊற்றி மணியின் முன் வைத்தாள்.மணி சாப்பிட்டான்
“வேல கஷ்டமா இருந்துச்சா”
“அதெல்லாம் ஒன்னமில்ல”
“நாளைக்கு ஒரு நாள் மட்டும்கூட போவியா”
“சரிம்மா சாப்பிடும் போது நொய் நொய்ங்காதே”
‘இப்ப என்ன கேட்டுட்டனு எரிஞ்சு விழுத, உன்ட வந்து பேசினம் பார்” என்று பத்து பத்திரத்தை கழுவ உட்கார்ந்தாள் மணியின் அம்மா. மணி சாப்பிட்டு முடித்து விட்டு
“எம்மா நான் ஆற்றுக்கு போய்ட்டு வாரேன்”
“போறது சீக்கிரமா போயிருக்கலாம்ல இருட்ல பார்த்து போ”
மணி ஆற்றை நோக்கி போனான் .


அடுத்த நாள் மணியும் மணியின் அப்பாவும் மானூர் வந்து இறங்கினார்கள். குப்பனாவரம் சாலையை அடைந்ததும் மணி ஏற்கெனவே வேலைக்கு கிளம்பும் பொழுது, எடுத்து வைத்திருந்த தாளில் தாள்வட்டு செய்து அவனுடைய அப்பாவுக்கு தெரியாமல் காற்றில் ஒடவிட்டான. அவைகள் அவனுடைய அப்பாவை கடந்து நிண்ட தூரம் ஒடிசென்றன. மணிக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இருவரும் சாலையை தாண்டி வயல் காட்டை கடந்து தாவீது வீட்டை அடைந்தனர். இளப்பு வேலைக்கு மணியின் அப்பா தயார் செய்து விட்டு, மணியை அழைத்தார். மரம் ஈரமாக இருந்ததால் இளைத்து வரும் தூள்கள் சுருண்டு சுருண்டு ஆப்பிரிக்க மனிதர்களின் மூடிபோல் சுருட்டி கொண்டு விழுந்ததை மணி ரசித்தான். ஒரு வழியாக மதிய சாப்பாடு வேளைக்குள் இளப்பு வேலை முடிந்தது. மணி சாப்பிட்ட உடன் அவனுடைய அப்பா சாப்பிட உட்கார்ந்தார். மணி தெருவிற்கு வந்து தெருவை பார்த்தான். கோழிகள் இரண்டு மேய்ந்து கொண்டு இருந்தது. ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. தெருவின் கடைசியில் ஒரு ஊசி கோபுர சர்ச் இருந்தது. ஊரில் அதுதான் பெரிய கட்டடமாக இருக்கும் என மணி நினைத்து கொண்டான். சர்ச் பக்கம் போகலாமா வேண்டாமா என யோசித்து, வேண்டாமென முடிவெடுத்து உள்ளே சென்றான் . அவனது அப்பா சாப்பிட்டு முடித்து பலகையின் மீது சாய்ந்து கொண்டு களைப்பு நீக்கி கொண்டிருந்தார். மணி, கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து மார்க் பண்ணும் பென்சிலை எடுத்து பலகையில் சும்மா கிறுக்கி பின் இளைத்த மரம் தெரியாமல் போக வாய்ப்பு உள்ளதை நினைத்து அவற்றை அழித்தான்.

மணியின் அப்பா சன்னல் சட்டங்களை எடுத்து துளை அடிக்க ஆரம்பித்தார்.அவனுடைய அப்பா சின்ன வயதில் சேரன்மாதேவி பார்வதி காப்பி பொடி கடையில் கடை பையனயாய் வேலை பார்த்தது,சினிமா தியட்டரில் ஆபரேட்டா வேலை பார்த்தது, பக்கத்து வீட்டு சமையல் வேலை செய்பவர்களுடன் கூடமாட சென்று சமையல் வேலை செய்தது போன்ற பலவேறு வேலைகளை செய்து கடைசியில் தச்சு வேலையில் நிலைத்து நின்றதை அவனுயை அம்மா அப்பப்ப சொன்னது நினைவில் வந்ததது.
“அந்த தகட்டு உளியை எடுடா” என்று அவனுடைய அப்பா
கூறியவுடன் சுதாரித்து தகட்டு உளியை எடுத்து கொடுத்தான்.
மணி விழுந்து கிடந்த நான்கு ஐந்து பலகை துண்டுகளை எடுத்து பெட்டி மாதிரி வைதது பார்த்தான். பெட்டி மாதிரி இருந்தது. ஒரு பலகை மட்டும் ரொம்ப நிளமாக இருந்தது. அப்படியே வைத்து ஆணி அடித்தால் சின்ன பெட்டி மாதிரி இருக்குமென நினைத்து
ஆணிணை தேடி எடுத்தான். ஆணி அறைந்தான் பலகைக்கு வெளியே வந்து நீட்டி கொண்டு நின்றது . அதை பிடிங்கி விட்டு சின்ன ஆணி எடுத்து அறைந்தான். ஆணி வளைந்தது. சரியாக வராமல் என்ன செய்வது என முழித்தான்.இதை எல்லாம் பார்த்து கொண்டே இருந்த, மணியின் அப்பா, வளைந்த ஆணியிணை பிடிங்கிவிட்டு, இன.னொரு சின்ன ஆணி எடுத்து மெல்ல மெல்ல அடித்து பூட்டி மணியிடம் கொடுத்தார். அவன் செய்த முதல் மர பொருள் அதுதான் என்பதால் மணிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பத்திரமாக சாப்பாடு பையில் போட்டு வைத்தான்.


நெல்லை எக்ஸ்பிரஸ் காலதாமதமாக 9 மணிக்கு நெல்லை வந்து சேர்ந்தது., மணியின் மனைவி, மணியின் பெண் குழந்தை ஆகியோருடன் மணி வெளியே வந்து தெரிந்த பையன்களின் ஆட்டோ ஏதாவது நிற்கிறதா என பார்த்தான்.யாரும் தெரிந்த மாதிரி இல்ல. அதற்குள் ஒரு ஆட்டோ டிரைவர் அவனை தெரிந்த மாதிரி வந்து
“அண்ணே மீனாட்சிபுரம் தானே “என்று சொல்லி அவன் ஆட்டோவில் ஏற வைத்தான். மணியும் பொருட்களை எடுத்து ஆட்டோவில் வைத்து, ஆட்டோவில் அமர்நதான்.

ஆட்டோ மீனாட்சிபுரம் கீழத்தெருவில் திரும்பி மணியின் அப்பா அம்மா இருக்கும் புதிய வாடகை வீட்டின் எதிரில் நின்றது. ஆட்டோ வாடகையினை கொடுத்து விட்டு பெட்டியை தூக்கி உள்ளே நுழையவும் மணியின் அம்மா ஆட்டோ சத்தம் கேட்டு வெளியே வந்து
“ வா மணி, வாம்மா, என் செல்லம் வாடா என்று மணியின் மகளை வாங்கி கொண்டே மணியின் அம்மா வீட்டினுள் நுழைந்தாள். அவளை தொடர்ந்து மணி, மணியின் மனைவியும் உள்ளே நுழைந்தார்கள். மணி சூட்கேஸை திறந்து லுங்கி அணிந்து கொண்டு ஆற்றுக்கு சென்றான். நல்ல வளர்ந்த முள்மரம் மறைவில் அமர்ந்து வெளியே போய்விட்டு ஆற்றில் காலை கழுவிட்டு அவன் சின்ன வயதிலிருந்து குளிக்கும் வட்டபாறையில் துணிகளை வைத்து குளிக்கு தொடங்கினான்.
மணியின் நண்பன் ராஜேந்திரன்
“ என்ன மணி, எப்படா வந்த, உன் மக எப்படி இருக்கா, விட்ல சுகமா” என வினாவினான்
“எல்லாரும் சுகம் தான். உங்க அம்மா, தம்பிகள் எப்படி இருக்காங்க “
“சுகம் தான்’
“நம்ம பிரண்டஸ் எப்படி இருக்கான்க”
“அவன் வேலைக்கு போறன்கள்ள யாரையும் அடிக்கடி பார்க்க முடியால, எப்பவாது ஆத்தில குளிக்க வரும்போது பார்த்ததான் உண்டு, எல்லாரும் நல்லதான் இருக்கான்க ‘
பேச்சுக்கிடையே மணி சோப் போட்டு தண்ணீரில் பாய்ந்தான்.
“பாறை பழைய மாதிரி இல்ல கொஞ்சம் வளர்ந்திருக்கு , பார்த்து குளீ”
“ஆமா நம்ம ஆற்றுல குளிச்ச மாரி வருமடா”
என்று சொல்லி கொண்டு நான்கைந்து தடவி மூங்கி எழுந்தான் மணி. பின் பாறையில் ஏறி தலை துவட்டினான்.
“ராஜி நான் வாரண்டா”
“இன்னும் கொஞ்ச நேரம் குளியன்டா”
“இல்லடா அவங்க வீட்டுக்கு வேற போனும் , அவ காத்திட்டு இருப்ப”
“சரி சரி போ நேரம் கிடைச்ச கம்பெனி பக்கம் வா”
மணி வேகமாக வீட்டுக்கு நடந்தான். வீட்டுக்கு வெளியே உள்ள கொடியில், துவைத்த துணிகளை காய போட்டு விட்டு வீட்டுக்குள் சென்றான். மணியின் அப்பா பேத்தியை கொஞ்சி கொண்டு இருந்தார். அவன் மனைவி அந்த வாடகை வீட்டில் இருந்த எடுப்பு கழிப்பறையில், வெளியே போய்விட்டு முடுக்கு கதவை சாத்தி விட்டு அந்த நிள முடுக்கில் ஒரு ஒரமா நின்னு குளித்து விட்டு ஆடை மாற்றி விட்டு வீட்டினுள் முனுமுனுத்து கொண்டு நுழைந்தாள். அவளுக்கு எடுப்பு கழிப்பறையில் வெளியே போக பிடிக்காமல் தான் இந்த முனுமுனுப்பு என்று மணி புரிந்து கொண்டான்.
“என்ன “
“ஒன்னுமில்ல”
“எப்ப எங்க வீட்டுக்கு போறது”
“இரு காலை சாப்பாடு சாப்பிட்டுட்டு போவோம்”
அப்பாவிடமிருந்த மகளை வாங்கி அவனது மனைவி, பாட்டிலில் மணியின் அம்மா அடைத்து கொடுத்த பாலை புகட்டினாள்
“மணி, சாப்பிட உட்காரு “ என்றாள் மணியின் அம்மா
மணியின் அப்பா, சாப்பிடுவதற்கு வசதியாக இருக்கட்டும் என்று வீட்டுக்கு வெளிபக்கம் உள்ள முற்றத்தில் போய் உட்கார்ந்தார்.
மணியும் அவனது மனைவியும் சாப்பிட்டு முடித்தார்கள்.
அவனது அப்பா சாப்பிட உள்ளே சென்றார். மணி சட்டை மாட்டி கொண்டு கடைவீதிக்கு சென்று ஒரு ஆட்டோ பிடித்து வந்தான். அதற்குள் அவனது மனைவியும் குழந்தையும் தயாரக .இருந்தார்கள். மணி பேண்ட மாற்றி கொண்டு
“ இவங்கள விட்டுட்டு வாரேன் அம்மா” என்றான்
‘ மத்தியானம் சாப்பிட்டுட்டு போகலாம்ன உன் பெண்டாட்டி கேட்க மாட்டேன்கறா”
“ சரி சரி” என்று கூறியவாறு சூட்கேஸை எடுத்து ஆட்டோவில் வைத்தான்
“நான் போய்ட்டு வாரேன்” என்றாள் மணியின் மனைவி
‘சரிம்மா”
“வாரேன்ம்மா”
‘சரி’ ஆட்டோ பாளையங்கோட்டையில் இருக்கும் மணியின் மாமனாரின் வீட்டுக்கு சென்றது. அவர்கள் வரவை எதிர்பார்த்து
இருந்த அவனதுமனைவியின் குடும்பத்தார் .ஆட்போ நிற்கவும்
வெளியே வந்து வரவேற்று உள்ளே சென்றனர்.

ஒரு வாரம் ஊரில் இருந்து விட்டு ஆட்டோவில் வந்து மணி அம்மா அப்பாவிடம் சொல்லி விட்டு குடும்பத்துடன் ரயில் நிலையம் சென்றான். அதற்குள் அவனது மனைவியின் குடும்பத்தார் அங்கு வந்து இருந்தார்கள். வண்டி புறப்படுவதற்குள் மணியின் அம்மாவும் அப்பாவும் வழியனுப்பு வந்து விட்டார்கள்.
இரண்டு வீட்டார்களும் லாலா கடை அல்வா மற்றும் மிக்சர் வாங்கி கொடுத்தார்கள். நெல்லை எக்ஸபிரஸ் கிளம்ப தயாராகி புறப்பட்டது. மணியின் மனைவி அவர்களின் குடும்பத்தாருக்கு அழுது கொண்டே விடை அளித்தாள். மணி எல்லாருக்கும் கைகாட்டி விட்டு இருக்கையில் அமர்நதான். சன்னல்களில் ஊர்கள் எதிர் திசையில் ஓடிக்கொண்டு இருந்தன.மணிக்கு ஊருக்கு வருவதே சமிப காலமாக பிடிப்பது இல்லை. அவனுடைய அம்மா” நீ இங்கு தங்குவதில்லை” என்பதும் பாளைக்கும நெல்லைக்கும் இரண்டோரு நாளுக்கு ஒரு முறை அலைந்து திரிவது யாருக்கும் திருப்தி இல்லாமல் பணம் செலவழித்து, ஏன் இந்த பயணம் என நினைத்தான்.

எம்.ஏ முடித்த இரண்டு ஆண்டுகளில் வேலை கிடைத்தது இப்பதான் கல்யாணம் ஆனமாதிரி இருந்தது அதற்குள் காலம் எவ்வளவு வேகமாக செல்லுகிறது. ரொம்ப கஷ்டப்பட்டு அவனுடைய அம்மாஅப்பாவும் அவனை படிக்க வைத்து பணக்கார இடத்தில கலயாணம் முடித்து, இந்த நல்ல நிலைக்கு வர காரணமாய் இருந்ததை நினைத்து பெருமிதமானன். இருள் கவிழ தொடங்கியது காட்சிகள் மின்விளக்களாய் மாறியது. ட்ரெயினின் உள்ளே பார்வை செலுத்தினான். “
“என்ன தொட்டில் கட்ட கூடாதா”
இரண்டு அப்பர் பர்த் கம்பிகளில் சேலையை கட்டி தொட்டியில் கட்டி இழுத்து பார்த்து
“ சரியா இருக்கானு பார்”
அவனது மனைவியும் இழுத்து பார்த்து விட்டு
“ம்”
கொடுத்து விட்டிருந்த பொட்டலத்தை திறந்து, இருவரும் சாப்பிட்டார்கள். பின்னா மணியின் மனைவி பிளாஸக்கிலிருந்து பாலை பாட்டிலில் ஊற்றி மகளுக்கு கொடுத்தாள். குடித்து கொண்டே தூங்கிய குழந்தையை தொட்டில் போட்டு இரண்டு தடவை ஆட்டி விட்டு, கழிப்பறை சென்று விட்டு வந்து, மணியின் மனைவி அவளது பர்த்தில் ஏறி படுத்தாள். மணி அப்பர் பர்த்தில ஏறி படுத்தான்.

மணி, மாதம்தோறும், அவனது அப்பாவுக்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்புவான். அவன் அப்பாவும் பணம் பெற்றது பற்றியும் நலம் விசாரித்தும், ஊரில் சொந்தத பந்தங்களுக்கு நடந்த நல்லது கெட்டதுகளை கடிதம் மூலம் பறிமாறி கொள்வார். அப்பாவிடம், சின்ன வயசில் பேசியதற்கு அப்புறம், இப்பதான் கடிதம் வாயிலாக அவருடைய அண்மையை மணியால் உணர முடிந்தது. ஆம்பிளை பிள்ளைகள் ஒரு வயசுக்கு பின் அப்பாவிடம், அவர்களை அறியாமல் பேச்சை நிறுத்தி கொள்வதும், அம்மா மூலம் அப்பாவிடம் பேசுவதும் எப்படி தோன்று தொட்டு அவனுக்கும் வந்துபோனதை நினைத்து பார்த்தான். சின்ன வயதில் புறுக்கு புறுக்கு அய்யரை அவனும் அவன் நண்பர்களும் “ புறுக்கு புறுக்கு” என சத்தம் போட்டு கிண்டல் அடித்து ஓடி ஒளிந்து கொள்ளும் போது, அவனை பிடித்து அடித்த தொப்பையா பிள்ளையிடம் அப்பா சண்டைக்கு சென்றது சின்ன வயசில் அவன் அப்பாவை அவனுக்கு ஒரு கதாநாயகனாக காட்டியது. அவனுடைய அப்பாவுக்கு காது கேட்காது காரணத்தால் அவ்வளவாக பேச .இயலாது . தற்போது அவர் எழுதிய கடிதங்கள், மீண்டும் அவரிடம் பேசும் உணர்வை அளிக்கும் வண்ணம் இருந்தது.

மணி, தவறாது ஆண்டுக்கு ஒரு தடவையாவது குடும்பத்துடன் ஊருக்கு செல்வது வழக்கமாய் கொண்டிருந்தான்.
அவ்வாறு பல ஆண்டுகள் சென்று வந்தான். அதை போல் இந்த தடவை நெல்லை எக்ஸ்பிரஸில் மணி மணியின் மனைவி அவனது இரண்டு பெண்குழந்தைகளுடன் ஊருக்கு சென்றான். ட்ரெயின் நெல்லை நிலையம் வந்து அடைந்ததும் அவனது மனைவியின் அப்பா வரவேற்று வெளியே அழைத்து சென்றார். ஆட்டோ பிடித்து பொருட்களை ஏற்றினார். மணி அவரிடம்
“வீட்டுக்கு போயிட்டு போகலாம்’
“எங்க இப்ப உள்ள வீட்ல கழிப்பறை இல்லையாம் அப்பா சொன்னார். நான் பொறுத்து கொள்வேன். சின்னவ ரோட்டில வெளியே போமாட்டா. பெரியவளும் போமாட்டா.நேரா எங்க வீட்டுக்கு போயிட்டு சாயங்காலம் உங்க வீட்டுக்கு வரலாம்”

“ அது சரி படாது, நான் எங்க வீட்டுக்கு போயிட்டு
மத்தியான் உங்க வீட்டுக்கு வாரேன்”

அதற்குள் பெரிய பெண் ஏதோ அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டையென நினைத்து அழ, ரோட்டில் எதற்கு வாக்கு வாதம் என நினைத்து வேண்டா வெறுப்பாக ஆட்டோவில் ஏறி அமர்ந்தான். ஆட்டோ, பாளையை நோக்கி சென்றது. அன்று மதியம் சாப்பிட்டு விட்டு, மணியின் வீட்டுக்கு ஆட்டோவில் மணி குடும்பத்துடன் வந்தான். மணியின் அம்மா
“எப்ப வந்த, நேர வீட்டுக்கு வர வேண்டியதுதானே”
“இல்லம்மா வெளியே போறது குளிக்கிறது கஷடமல்ல
அதான்”
“என்னம்மோ எனக்கு சரிய படல “
வாங்கி வந்த இனிப்பை மணியின் மனைவி, அவனது அம்மாவிடம் கொடுத்தாள். வேலைக்கு சென்றிருந்த அப்பா சாப்பிட வந்திருந்தார்.
“எப்ப வந்தீங்க”என வழக்கமாய் கேட்பது போல் கேட்டு விட்டு
பேத்திகளை கொஞ்சி விட்டு, அவர்களுக்கு கிளப் கடையில்
போய் ஆம வடை வாங்கி வந்து
“சாப்பிடும்மா“ என பேத்திகளை கெஞ்சி கொண்டிருந்தார்.
பிள்ளைகள், அவர்களது அம்மாவின் அனுமதி வேண்டி முகம் பார்த்து, அனுமதி கண்அசைவில் கிடைத்ததும் சாப்பிட்டார்கள்.
மணியின் மனைவியிடம்
“ நீ இரண்டு சாப்பிடும்மா”
“இப்ப தான் சாப்பிட்டேன் மாமா எனக்கு வேண்டாம்”
மணி பொட்டலத்தில் இருந்து ஒரு வடையை எடுத்து சாப்பிட்டான். சின்னவ மணியின் மடியில் ஏறி அமர பெரியவளும் ஏறி அமர்ந்தாள்.
“அப்பாவுக்கு வலிக்கும் யாராவது ஒருத்தர் இறங்குங்க”
“சும்ம இருக்கட்டும் விடு’
அதற்குள் அப்பா பால் வாங்கி வந்தார் . அம்மா காப்பி போட்டு எல்லாருக்கும் கொடுத்தாள்.
“மணி அப்பா நேத்து வாங்கன மிக்சர் இருக்கு சாப்பிடதியா”
என்று மிக்சர் பொட்டலத்தை அவன் முன் வைத்தாள்.காப்பியை குடித்து கொண்டே மிக்சரையும் சாப்பிட்டான். சின்னவ
“ அப்பா எனக்கு “ என்றாள்
‘அப்பா எனக்கும் “ என்றாள் பெரியவள்
“வேண்டாம் நேத்து மிக்சர்”என்றான் மணி
இரண்டும் அவர்களது அம்மாவிடம் சென்றார்கள்.
“ராத்திரி சாப்பிட்டு போலம்டா”
“இல்ல அத்தை, போய் துணி துவைக்கனும்”
“நீயாவது இரியண்டா’
“சரிம்மா இவர்களை விட்டுட்டு வாரேன் “ என கூறியவாறு ஆட்டோ பிடிக்க சென்றான். அவன் வருவதற்குள் மணியின் அப்பா அன்றைக்கு போட்ட மிக்சா வாங்கி பேத்திகளின் கையில் கொடுத்து சாப்பிட வைத்திருந்தார். பிள்ளைகள் சாப்பிட்டவுடன் ஆட்டோவில் ஏறி, மணி குடும்பத்துடன் மாமானார் வீடு சென்றான். மணி, அப்பா அவனது பிள்ளைகள் மீது வைத்து இருக்கும் அன்பை நினைத்து நெகிழ்ந்து போனான். அதிலும் பெரியவளுக்கு அவருடைய பெயர் விட்டு இருப்பதால் ரொம்ப பிரியமாய் இருப்பார். அப்பாவுக்கு சின்ன பிள்ளைகளை ரொம்ப பிடிக்கும் என தெரியும். அப்பா பேத்திகளிடம் காட்டும் அளவு அன்பை தன்னிடம் செலுத்தினரா என யோசித்தான். அவன் மீது அவருக்கு அவன் ஒரே ஒரு பிள்ளை என்பதால் கொள்ளை பிரியம் உண்டு என்பதற்கு சாட்சியாக எததனையோ நிகழ்வுகள் அவன் மனதில் வட்டமிட்டன. அது வேறுமாதிரி இது வேற மாதிரி என சமாதானம் ஆனான்.


சென்னைக்கு வந்து, மணி அந்த மாதம் அப்பாவுக்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்பினான். அந்த தடவை மணியார்டர்வுடன் வரும் பெறுகை துண்டு வரததால் அவன் அப்பாவுக்கு, பணம் பெற்று கொண்டது பற்றி தெரிவிக்குமாறு கடிதம் எழுதினான். ஆனால் பதில் வரவில்லை.
அடுத்த மாதம் பணம் அனுப்பியதற்கான பெறுகை துண்டு வந்ததது. ஆனால் அப்பாவிடமிருந்து கடிதம் வரவில்லை. மணி மீண்டும் ஒரு கடிதம் எழுதி நலம் விசாரித்தான். அதற்கும் பதில் வரவில்லை. அப்பா கோபத்தில்தான் அவனுக்கு கடிதம் எழுதாமல் இருக்கிறார் என உணர்ந்து கொண்டான். முதலில் அப்பா மீது கடிதம் எழுதாதற்காக கோபம் வ்நதாலும் அவர் பக்கம் உள்ள நியாயம் புரிந்து இது பற்றி யாரிடமும் கேட்ககூடாது என ஒரு முடிவுக்கு வந்தான். ஆனாலும் ஒவ்வொரு மாதமும் அப்பா கோபம் தணிந்து கடிதம் எழுதமாட்டார் என ஒரு நப்பாசை மனதில் உதிக்க தவறவில்லை. அவர் கையெழுத்து போட்ட ஒப்புகை ஒன்றுதான் அவனுக்கு மாதம் தோறும் அவனது அப்பாவை காண்பித்தது. அவுருடைய கையெழுத்தில் ஏற்படும் தடுமாற்றம் அவர் தள்ளாமையில் ரொம்ப கஷ்டப்படுகிறார் என உணர்த்தியது.,அவர் தள்ளாமையால் கீழே விழுந்தது, அவருக்கு முடியாமல் போனது மற்றும் எந்த விஷயத்திற்காகவும், மணிக்கு அவர் கடிதம் எழுதவில்லை அவன் பல தடவை ஊருக்கு சென்ற போது வழக்கம் போல் அவனிடமும் மனைவி பிள்ளைகளிடம் பேசினாலும் மணிக்கு மணியின் அப்பா அவரின் கடைசிகாலம் வரை அவனுக்கு கடிதம் எழுதவில்லை. அவரை பொறுத்தவரை மணி ஊரிலிருந்து நேராக மணியின் வீட்டுக்கு செல்லாமல் , மாமானார் வீட்டுக்கு சென்றதை மன்னிக்க தயாராகவில்லை என்பதும் அதில் நியாயம் இருக்கிறது என்பதை மணி, மனப்பூர்வமாக உணர்ந்தாலும் கடைசிவரை கடிதம் எழுதாமல் அவனுடைய அப்பா இருந்து விட்டாரே எனும் ஏக்கம் எப்போதவது தொண்டை அடைக்கும்.

1 கருத்து:

Bogy.in சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in